கனகவேல் காக்க – நாளை முதல்

02

நான் வசனம் எழுதியிருக்கும் ‘கனகவேல் காக்க’ திரைப்படம் நாளை [மே 21] வெளியாகிறது. உலகத் திரை சரித்திரத்திலேயே முதல் முறையாக என்றெல்லாம் கப்சா விடத் தயாரில்லை. சுத்தமான, அக்மார்க் கமர்ஷியல் மசாலா.

கரண், ஹரிப்ரியா, கோட்டா ஸ்ரீனிவாசராவ், சம்பத் ராஜ் நடித்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனி இசை. சுரேஷ் அர்ஸ் எடிட்டிங். இயக்குநர் சரணிடம் பல்லாண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் மிக்க கவின்பாலா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

திரைப்படத்துக்கு எழுதுவது என்பது எழுத்தாளர்களைப் பொருத்தவரை வெளியே சொல்ல முடியாத ஒரு சில வேதனைகளைச் சுமந்த பணி. டைரக்டர் சரியான ஆளாக இருந்தாலொழிய, எழுத்தாளன் கொத்து பரோட்டா போடப்படுவது அங்கே தவிர்க்க முடியாதது. தற்செயலாக எனக்குக் கிடைத்த இயக்குநர், ஓர் எழுத்தாளனின் சுதந்தரத்தையும் ஈடுபாட்டையும் மதிக்கக்கூடியவராக இருந்தார். கடைசிவரை என் பணியில் ஒருபோதும் தலையிடாமல், ஆங்காங்கே அவரைக் கவர்ந்த வரிகளைச் சொல்லிச் சொல்லிச் சிலாகித்து சந்தோஷப்பட்டார்.

பத்து நாளில் என் எழுத்து வேலைகள் முடிந்துவிட்டன என்றாலும் இன்றைய வெளியீட்டுக் கோலாகலம் வரை தினசரித் தொடர்புடனும் ஆர்வ விசாரிப்புகளுடனும் இருக்க முடிந்ததற்கு இதுவே முதற்காரணம். எழுதுபவனுக்குச் சம்பளமல்ல; உற்சாகம் தரும் குழுவே முதன்மையானது.

கமலஹாசனின் அலுவலகத்தில் பாடல் வெளியீடு நடைபெற்றது, ராத்திரி பத்து மணிக்குக் கதவைத்தட்டி வந்து உட்கார்ந்து கரண் கதை பேசிவிட்டுச் சென்றது, சென்சார் ஆபீசர்கள், யார் எழுத்தாளர் என்று கேட்டு, கூப்பிட்டுக் கைகொடுத்துப் பாராட்டியது, சுரேஷ் அர்ஸ் தனது ஸ்டுடியோவுக்கு வருகிற அத்தனை பேரிடமும் இந்தப் படத்தைப் பற்றியும் என் எழுத்து பற்றியும் குறிப்பிட்டுக் குறிப்பிட்டுப் பேசிக்கொண்டே இருந்தது, புதிய தலைமைச் செயலகத்துக்காக இடிக்கப்பட்ட ராஜாஜி பவனில் கட்டக் கடைசி நாள் ஷூட்டிங் நடத்த நேர்ந்தது, நாளை முதல் அந்தக் கட்டடம் இருக்காது என்பதனாலேயே ஓடோடிப் போய், அங்கே எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சிகள் சிலவற்றைப் பார்த்தது, இந்திய ராணுவத்திடம் இல்லாத ஓர் ஆயுதம் கதைக்குத் தேவைப்பட்டதால், நமது ராணுவத்தில் என்னென்ன ஆயுதங்கள் இருக்கின்றன என்பதை அறியப் படாத பாடுபட்டது என்று ஓய்வாக உட்கார்ந்து அசைபோட்டு சுகம் காண நிறைய அனுபவங்களை எனக்களித்த படம் இது.

எழுதியது – எடுத்தது என்கிற பணிகளைவிட, ஒரு திரைப்பட வெளியீடு என்பது எத்தனை பெரிய காரியம் என்பதை எனக்கு முதல் முதலில் புரியவைத்த வகையில் இந்த அனுபவத்துக்கு நிகரே சொல்ல முடியாது.

ஒரு படம் தியேட்டரில் ஒரு நாள் ஓடுகிறதா, வெள்ளி விழா கொண்டாடுகிறதா என்பதல்ல. எடுத்து முடிக்கப்பட்ட தினம் தொடங்கி, படப்பெட்டி தியேட்டர் வாசலைத் தொடுவதற்கு இடையில் உள்ள தினங்களை மையமாக வைத்து ஒரு மெகா சீரியலே எடுக்கலாம் போலிருக்கிறது.

சிரமங்களின் பல்வேறு விதமான நூதன வடிவங்களைப் புரிந்துகொள்ள இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்ததது.

எனக்கு வாய்த்த இயக்குநரைச் சொல்லவேண்டும். சிரிக்கும் புத்தர் சிலை மாதிரி எப்போதும் ஒரே விதமான முக பாவனை. என்ன சிக்கல், எத்தனை நெருக்கடி வந்தாலும் ‘பாத்துக்கலாம் சார்’ என்று அடுத்தவருக்கு நம்பிக்கை கொடுப்பதையே தலையாய பணியாகக் கருதிய அவரது குணத்தை வியக்கிறேன். முதல் பிரதி பார்த்த சில ப்ரொட்யூசர்கள் அவரைக் கன்னடத்திலும் தெலுங்கிலும் இதே படத்தை எடுக்கச் சொல்லி அட்வான்ஸ் கொடுக்க வந்திருக்கிறார்கள். கை நீட்டி வாங்கினால் தெரியும் சேதி என்று மிரட்டி வைத்திருக்கிறேன்.

அடுத்ததும் தமிழில்தான் செய்கிறார். செய்கிறோம்.

நாளை படம் பார்த்துவிட்டு எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். ஆரவாரமான பாராட்டுகளுக்காகவும் காரசாரமான கண்டனங்களுக்காகவும் கட்டாயம் காத்திருப்பேன்.

[சென்ற வாரம் தமிழோவியத்தில் வெளியானது. மிகச் சில மாற்றங்களுடன் இங்கே.]
Share

8 comments

  • ஆல் தெ வெரி பெஸ்ட் சார்.

    எதைச் செய்தாலும் நுணுக்கத்தைப் புரிஞ்சி பண்றவர் நீங்க.

    இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

    படத்தை நாளைக்கே பார்க்கிற வசதி இல்லை, ஆனா பார்த்தாகணும்!

  • ஒரு எழுத்துலக மேதையின் திரையுலக பிரவேசம் !! ஆகா !! பொதுவாக நான் புதிய படங்களை பார்ப்பதில்லை அதிலும் தமிழ்படங்கள் பார்க்க மாட்டேன் !! ஆனால் தங்கள் எழுத்திற்காக என்னை பார்க்க தூண்டுகிறது !!
    அசத்துங்கள் பா.ரா அவர்களே !!
    பா.ரா ரசிகன் ராஷித் அஹமத் சவூதி அரேபியா

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!